
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டி கரூர் அருகே அம்மனை ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து பெண்கள் வழிபட்டுள்ளனர்.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், நீண்டகாலத்தை கருத்தில்கொண்டால் இதன்மூலம் பலன் கிட்டும் என சில பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனால், ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரமும் பொருளாதாரமும் அதேநிலையில் தான் உள்ளது. அவர்களுக்கான வளர்ச்சித்திட்டங்கள் எதுவும் இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை முக்கியமான செயல் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
இந்நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவிலில் சில பெண்கள் பூஜை செய்தனர். அப்போது நாட்டின் பொருளாதாரம் உயர வேண்டும், ஏழை மக்களின் பொருளாதார நிலையும் வாழ்வாதாரமும் உயர வேண்டும் என வேண்டி அம்மனை ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து பெண்கள் வழிபட்டனர். 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் கோவில் கருவறையையும் அம்மனையும் அலங்கரித்து பெண்கள் வழிபட்டுள்ளனர்.