சாக நினைத்து கிணற்றில் குதித்த பெண் உயிருடன் மீட்பு; காப்பாற்ற முயன்ற இளைஞர் பரிதாபமாக சாவு...

First Published May 25, 2018, 8:18 AM IST
Highlights
woman jumped to well to commit suicide is alive young man who tried to save her is died...


திருப்பூர்
 
திருப்பூரில் தற்கொலை செய்துகொள்ள கிணற்றில் குதித்த பெண் உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால், அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்த இளைஞர் தண்ணீரில் மூழ்கினார்.

திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த ராயர் கோவில் காலனியைச் சேர்ந்தவர் மணி (61). இவருடைய மனைவி மசறியம்மாள் (55). இவர்களுக்கு மல்லிகா மற்றும் மகேஸ்வரி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி கணவருடன் வெளியூரில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஆறுமுகமும் மற்றும் மசறியம்மாளும்  ராயர்கோவில் காலனியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால், மசறியம்மாள் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவராம்.

நேற்று ஆலாங்காடு பகுதியில் உள்ள கிணற்றுக்கு மசறியம்மாள் சென்றார். 100 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 50 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. 

திடீரென்று மசறியம்மாள் தற்கொலை செய்து கொள்ள அந்த கிணற்றுக்குள் குதித்துவிட்டார். இதனை ஆலங்காடு தோட்டத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன்கள் சுபாஷ் (20), மாணவன் வெங்கடேஷ் (17) ஆகியோர் பார்த்து அந்த கிணற்றுக்கு அருகே ஓடினார்கள். 

அப்போது, கிணற்றுக்குள் மசறியம்மாள் தத்தளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அவரை காப்பாற்ற அண்ணன் - தம்பி இருவரும் கிணற்றுக்குள் குதித்தனர். உடனே வெங்கடேஷ், கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த மசறியம்மாளை மீட்டு கிணற்றுக்குள் இருந்த படிக்கட்டில் அவரை அமர வைத்தார். 

ஆனால், சுபாஷ் தண்ணீருக்குள் மூழ்கினார். அவரை வெங்கடேசால் மீட்க முடியவில்லை. இதனால் கிணற்றுக்குள் இருந்து வெங்கடேஷ் அலறினார். இவருடைய சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, மசறியம்மாளையும், வெங்கடேசையும் உயிருடன் மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் சுபாஸை தேடினார்கள். ஆனால், அவர்களால் தண்ணீரில் மூழ்கிய சுபாசை மீட்க முடியவில்லை. இதனையடுத்து அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 

உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுபாஸை தீவிரமாக தேடி வருகிறார்கள். இதற்காக கிணற்றில் உள்ள தண்ணீர் மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இருந்தும், இரவு 10 மணி வரை சுபாஸை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து அவினாசி காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!