
மஞ்சூர் அருகே எமரால்டு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் 54 கிராமங்கள் இப்பணிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மஞ்சூர் அருகே முள்ளிகூர், இத்தலார், நஞ்நாடு ஊராட்சிப் பகுதிகளில் 54 கிராமங்கள் உள்ளன. இதில், சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்தக் கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு நீண்டகாலமாக நிலவிவருகிறது.
கோடைக்காலத்தில், குடிநீருக்காக அவதிப்பட்டு வரும் இந்த 3 ஊராட்சிகளைத் சேர்ந்த கிராம மக்கள், குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், இப்பகுதி மக்களுக்காக எமரால்டு கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது.
எமரால்டு அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அணையில் இருந்து குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு நிலையத்துக்குத் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இக்கூட்டுக் குடிநீர்த் திடட்ப் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டன. எமரால்டு அணையில் இருந்து குடிநீர் கொண்டு செல்வதற்கான குழாய்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பல மாதங்களாகியும் இப்பணிகள் ழுழுமை பெறாமல் நத்தை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
குழாய்களை பதிப்பதற்காக சாலையோரங்களில் குழிகள் தோண்டப்பட்டது. ஆனால், இன்னும் குழாய்கள் பதிக்கப்படாமலும், குழிகள் மூடாமலும் உள்ளன. இதனால், அடிக்கடி வாகன விபத்துகள் நிகழ்கின்றன.
குடிநீர் பஞ்சம் நிலவும் நிலையில், பருவ மழையை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகி உளளது. எனவே, இக்கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என 54 கிராமங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.