
விருதுநகர்
ஜெயலலிதா பிறந்தநாள் விழா வருவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் குறித்து 19-ந் தேதி நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு நிர்வாகிகள் வர வேண்டும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அழைப்பு விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், "மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற அடிப்படையில் தமிழக மக்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்திலும், அ.தி.மு.க. சார்பில் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் வருகிற 19-ஆம் தேதி (அதாவது திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
மாலை 5 மணிக்கு சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டல் ‘ஸ்பார்க்கில் இன்’ னில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்திற்கு ராதாகிருஷ்ணன் எம்.பி. தலைமைத் தாங்குகிறார். சந்திரபிரபா எம்.எல்.ஏ. முன்னிலை வகிக்கிறார்.
இதில், ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது,
இரத்ததான முகாம் நடத்துவது,
முதியோர் இல்லங்களுக்கு சென்று அன்னதானம் வழங்குவது,
வேட்டி - சேலைகள் வழங்குவது,
கோவில்களில் அன்னதானம் வழங்குவது,
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பது,
விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
எனவே இந்தக் கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.