தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்திற்கு என்னவெல்லாம் ஏற்பாடுகள் செய்யணும் - திருவாரூர் ஆட்சியர் ஆலோசனை...

First Published May 5, 2018, 9:36 AM IST
Highlights
What are the arrangements for the Thiyagarajar temple devastation - Tiruvarur Collector advice


திருவாரூர்

தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தை எப்படி சிறப்பாக நடத்துவது? என்னவெல்லாம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் திருவாரூர் ஆட்சியர் தெரிவித்தார்.

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியது: "திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு வருகிற 27-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டத்துக்கு வடம் பிடிக்கப்படும். 

6 மணி முதல் 7 மணிக்குள் ஆழித்தேர், அம்மன், சண்டிகேஸ்வரர் தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறுகிறது. 

இந்த விழாவை முன்னிட்டு காவலாளர்கள் தேருக்கு முன்னும், பின்னும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும். மேலும் நகருக்குள் போக்குவரத்தை மாற்றி கொடுக்க வேண்டும்.

தேரோட்டத்தின் போது தேர் சக்கரங்களை சுற்றி மக்கள் வராமலிருக்க கயிறு வளையம் அமைக்க வேண்டும். நகராட்சி சார்பில் தேரோட்ட வீதிகளில் தேவையான இடங்களில் குடிநீர் வசதி மற்றும் கழிவறைகள் செய்து கொடுக்க வேண்டும். 

சுகாதார வசதிகள் செய்திட வேண்டும். தீயணைப்புத்துறையின் வாகனம் தேருக்கு அருகில் இருக்க வேண்டும். மருத்துவக்குழு அடங்கிய ஆம்புலன்ஸ் வாகனம் தேரின் பின்னால் தொடர்ந்து வர வேண்டும்.

இந்த விழாவில் தடையில்லா மின்சாரம் வழங்கி மின்வாரிய துறை தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நெடுஞ்சாலைத்துறை தேரோடும் 4 வீதிகளிலும் சாலையின் மைய பகுதியினை தெளிவுப்படுத்தும் வகையில் வெள்ளை கோடு வசதி செய்து கொடுக்க வேண்டும். 

தேரோட்டத்தையொட்டி அரசு மருத்துவமனைகளில் பகல், இரவு முழுவதும் கூடுதலாக டாக்டர், செவிலியர் மற்றும் உதவியாளர்கள் பணிபுரிய ஏற்பாடு செய்ய வேண்டும். தேரோடும் வீதிகளில் தற்காலிக மருத்துவ முகாம் வசதி செய்து தர வேண்டும். 

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தேரோட்ட விழாவில் பங்கேற்று எளிதாக திரும்பி செல்லும் வகையில் சிறப்பு பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும். 

ஆழித்தேரோட்ட நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து அலுவலர்களின் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜான்ஜோசப், திருவாரூர் உதவி ஆட்சியர் (பொறுப்பு) மலர்கொடி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் கிருஷ்ணன், கோவில் செயல் அதிகாரி ராஜேந்திரன், தாசில்தார் ராஜன்பாபு, திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

click me!