
கரூர்
எங்கள் பகுதிமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குளித்தலை நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து மக்கள் போராட்டம் நடத்தினர்.
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட மணத்தட்டை அருகே உள்ள காலனி தெருவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை தீர்க்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை மனு அளித்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை.
இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கரூர் மாவட்டக்குழு உறுப்பினர் முத்துச்செல்வன் தலைமையில் நேற்று மக்கள் குடிநீர் கேட்டு குளித்தலை நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“எங்கள் பகுதியில் காவிரி குடிநீர் வசதி இல்லை. இங்குள்ள அடி பம்புகள் மூலம் மட்டுமே தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து வந்தோம்.
இந்த நிலையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்த காரணத்தால் இந்த அடிபம்புகளிலும் தண்ணீர் வரவில்லை. இதனால் தண்ணீரின்றி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம்.
மேலும், எங்கள் பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நகராட்சி அதிகாரி ஜெயபிரகாஷ் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர், உடனடியாக நகராட்சி வாகனம் மூலம் தண்ணீர் வழங்கப்படும் எனவும், நிரந்தரமாக குடிநீர் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.