அரசின் நலத் திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லை - 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு...

First Published Feb 27, 2018, 6:26 AM IST
Highlights
we did not get Government Welfare schemes - More than 100 Transgender petition to collector...


திருச்சி

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசின் நலத் திட்டங்கள் திருநங்கைகளுக்கு சரியாக கிடைப்பதில்லை என்று  திருச்சி ஆட்சியர் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் முற்றுகையிட்டு ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் ராஜாமணி பங்கேற்று மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்திற்கு "அனைத்திந்திய அரவாணிகள் உரிமைகள் மற்றும் மறுவாழ்வு மையம்" சார்பில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் 100-க்கும் மேற்பட்டோர் வந்தனர்.

அவர்களுக்கு அதன் தலைவர் மோகனா தலைமைத் தாங்கினார். ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நின்ற காவலாளர்கள் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். கூட்டமாக செல்ல அவர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்பதால் காவலாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த திருநங்கைகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்த ஆட்சியரிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.

அந்த மனுவில், “எங்கள் அமைப்பு 2002-ஆம் ஆண்டு முதல் திருநங்கைகளின் மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது.

திருநங்கைகளுக்கான அரசின் நலத் திட்டங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திருநங்கைகள் பயன் பெறவில்லை.

வயதான திருநங்கைகளுக்கு முதியோர் உதவித்தொகை ஓராண்டாக வழங்கப்படவில்லை. 500-க்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில் 50-க்கும் குறைவானவர்கள் மட்டுமே அரசின் திட்டங்களால் பயன்பெற்று வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் திருநங்கைகள் அதிகளவில் வசிப்பதால் அவர்களுக்கு தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கி தர வேண்டும்.

படித்த திருநங்கைகளுக்கு படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

அதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

click me!