தளபதி விஜய் துவங்கியுள்ள 'தமிழக வெற்றிக் கழக' கட்சியின் கொடி நாளை வெளியிட உள்ள தகவலை அதிகாரப்பூர்வமாக தளபதி விஜய், அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
நடிப்பை தொடர்ந்து அரசியலில் கால் பதித்துள்ள தளபதி விஜய், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க 324 தொகுதியிலும் சந்திக்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்த நிலையில், தற்போது தன்னுடைய கட்சியின் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
அதன்படி ஆகஸ்ட் 22ஆம் தேதி, தளபதி விஜய் துவங்கியுள்ள 'தமிழக வெற்றிக் கழக' கட்சியின் கொடி வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இதனை உறுதி செய்யும் விதமாக விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் "தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாக மாறப்போகும் நம் வீரக்கொடியை, வெற்றி கொடியை, தலைமை நிலைய செயலகத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறியுள்ளார்.
கொடியுடன் சேர்த்து கழக பாடலையும் வெளியிட உள்ளதாக விஜய் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் "நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்". தமிழ்நாடு இனி சிறக்கும் என்றும்... வெற்றி நிச்சயம் என்றும் அறிவித்துள்ளார். நாளை காலை 9.15 மணிக்கு பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலகத்தில் தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், விஜய் தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலகத்தில், ஏற்றிப் பார்த்து ஒத்திகையில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.