
சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தற்போது 29 லட்சத்து 14 ஆயிரத்து 908 வாக்காளர்கள் உள்ளதாகவும், முந்தைய பட்டியலை விட சுமார் 21 ஆயிரம் வாக்காளர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளவும், நவம்பர் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களைப் பொதுமக்களும் கட்சியினரும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து தமிழக அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து 3 மாதங்களுக்குள் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் எனவும், சாக்குப்போக்கு சொல்லாமல் உள்ளாட்சித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.