
தருமபுரி
தருமபுரியில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் மரத்தில் சடலமாக கிடந்த திருநங்கையின் உடலை மீட்ட காவலாளர்கள் இதுகுறித்து வழக்குப்பதிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி புதுத்தெருவில் அருண்குமார் என்கிற தனுஸ்ரீ (25) என்பவர் வசித்து வந்தார். திருநங்கையான இவர் மற்றும் இன்னும் இரண்டு திருநங்கைகளுடன் இந்தப் பகுதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தனுஸ்ரீ தூக்கில் சடலமாக தொங்கினார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து மாரண்டஅள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலாளர்கள் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை தொடர்ந்தனர்.
மரத்தில் இருந்து சடலத்தை இறக்கிய பிறகு தனுஸ்ரீயின் உடலில் காயங்கள் இருந்ததை காவலாளர்கள் பார்த்தனராம்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவலளர்கள் தனுஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
திருநங்கை மர்மமான முறையில் மரத்தில் தூக்கில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.