
மதுரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குழாய் வெடிகுண்டுகளை காவலாளர்கள் நேற்று பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மூவரிடம் விசாரணை நடைப்பெற்று வருகிறது.
குடியரசு தின விழாவை சீர்குலைக்க சில அமைப்புகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது அனைவரும் அறிந்ததே.
இதனையடுத்து மதுரை இரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மதுரை கோ.புதூர் பகுதியில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்ததன் பேரில் காவலாளர்கள் கோ.புதூர் காந்திபுரம் 3-ஆவது தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் உக்கிரபாண்டி என்ற அப்துல் ரகுமான் (43), கோ.புதூர் விஸ்வநாதநகரைச் சேர்ந்த அழகர் மகன் அப்துல்லா (41) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
இதில் அப்துல்லா குழாய் வெடிகுண்டுகள் இரண்டை தயார் செய்து அப்துல் ரகுமானிடம் கொடுத்திருந்ததும், அவர் வெடிகுண்டுகளை ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள தையல் கடை ஒன்றில் பதுக்கி வைத்திருந்ததும் கண்டிப்பிடிக்கப்பட்டது.
இதையடுத்து இருவரையும் அழைத்துச் சென்ற காவலாளர்கள், ஆழ்வார்புரத்தில் உள்ள தையல் கடையில் இருந்து குழாய் வெடிகுண்டுகளைக் கைப்பற்றினர்.
ஒன்றரை அடி நீளம் உள்ள இரண்டு பிவிசி குழாயில் வெடிபொருள்கள் நிரப்பப்பட்டு பேட்டரி இணைப்பும் கொடுக்கப்பட்டு வெடிப்பதற்கு தயார் நிலையில் இரண்டும் இருந்தன.
இதையடுத்து வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு இரண்டு குழாய் வெடிகுண்டுகளையும் தகுந்த பாதுகாப்போடு அவர்கள் எடுத்துச் சென்று வண்டியூர் கண்மாய்ப் பகுதியில் வைத்து செயலிழக்கச் செய்தனர்.
அப்துல் ரகுமான், அப்துல்லா இருவரும் மதிச்சியம் காவல்நிலையத்துக் கொண்டு வரப்பட்டு அவர்களிடம் மாநகரக் காவல் துணை ஆணையர் அருண் சக்திகுமார், அண்ணாநகர் உதவி ஆணையர் சண்முகம் தலைமையில் காவலாளர்கள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இதில் தொடர்புடைய காதர் என்பவரை காவலாளர்கள் நேற்று இரவு பிடித்தனர். அவரிடமும் விசாரணை நடைப்பெற்று வருகின்றது.