
வெப்ப சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக தென் மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் ஜூன் 1-ந்தேதி தொடங்கும். ஆனால், கடந்த 2011ம் ஆண்டுக்குப் பின் பருவ மழை பொய்த்து, சுமாரான மழையாகவே இருந்தது. இதனால், தென் மேற்கு பருவ மழையை நம்பி இருந்த விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்கு பின், இந்த ஆண்டு 2 நாட்கள் முன்கூட்டியே பருவமழை பெய்து அனைத்து தரப்பு மக்களையும் குளிர்வித்து வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை இன்னும் இரண்டு நாட்களில் வெயில் படிப்படியாக குறைந்து தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வெப்ப சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சேலம், ஈரோடு, தருமபுரி, நீலகிரியில் மழை பெய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் வெப்பம் அதிகபட்சமாக 98 டிகிரி பாரன் ஹீட்டாக இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் குடுமியான்மலை பகுதியில் 9செ.மீ மழை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.