வைரஸ் காய்ச்சல் குறித்து எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை – ஆட்சியர் ஆறுதல்…

First Published Oct 13, 2017, 7:43 AM IST
Highlights
There is no need to worry about the virus fever - the comfort of the collector ...


விழுப்புரம்

வைரஸ் காய்ச்சல் நோய் குறித்து எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. அனைத்து காய்ச்சலையும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் முற்றிலுமாக குணப்படுத்த முடியும் என்று ஆட்சியர் சிவஞானம் தெரிவித்தார்

விழுப்புரம் மாவட்டம், சாத்தூர் அருகே நள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடைப்பெற்றது. இதற்கு ஆட்சியர் சிவஞானம் தலைமைத் தாங்கினார்.

இந்த முகாமில் 54 பேருக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

அப்போது அவர் பேசியது: “மக்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏடிஎஸ் கொசுக்களை கட்டுப்படுத்தும் பொருட்டு அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை வாரம் ஒரு முறையாவது கழுவி சுத்தம் செய்து பயன்படுத்துவதுடன் கொசுக்கள் உள்ளே புகா வண்ணம் மூடி வைக்க வேண்டும்.

வீட்டின் வெளியிலும், சுற்றுப்புறத்திலும் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற மண்பாண்டங்கள், உரல்கள், பழைய பாட்டில்கள், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றில் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்வதோடு வீட்டில் உள்ள கீழ் நிலை நீர் சேமிக்கும் தொட்டியை மூடுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

வைரஸ் காய்ச்சல் நோய் குறித்து எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. அனைத்து காய்ச்சலையும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.

காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்கள் தன்னிச்சையாக எவ்வித மருத்துவமும் மேற்கொள்ளாமல் காய்ச்சல் கண்டவுடன் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும்.

மேலும், கொசு ஒழிப்பு பணிக்கென வீடுகளை நாடி வரும் பணியாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்” என்று அவர் பேசினார்.

இந்த முகாமில், சாத்தூர் கோட்டாட்சியர் மங்களராம சுப்பிரமணியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பார்த்திபன், தாட்கோ மாவட்ட மேலாளர் ஜானகி, மாவட்ட வழங்கல் அலுவலர் செந்தில் ஆறுமுகம், சாத்தூர் தாசில்தார் முத்துலட்சுமி உள்பட அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.

click me!