
கன்னியாகுமரி
தமிழகத்தில் அதிமுக கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கும், மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சுதந்திர தினத்தையொட்டி நேற்று கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள முகாம் அலுவலகத்திலும், மாவட்ட பா.ஜ.க அலுவலகத்திலும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், நாகர்கோவில் வடசேரியில் நடைபெற்ற தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று, வடசேரி பேருந்து நிலையத்தை சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கி வைத்தார்.
முன்னதாக வடசேரி பேருந்து நிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், “சுதந்திர தினத்தில் சாதி, மத பேதமற்ற இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். நாட்டில் ஊழலுக்கு எதிராக ஜனநாயக ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திரமோடியின் சிறப்பான நிர்வாக திறமையால் உலக அளவில் வல்லமை மிகுந்த அரசாக இந்தியா உருவாகி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசக்கூடிய விஷயத்தில் ஏதேனும் பொருள் இருக்கும். இதனாலேயே அவரை பிரதமர் நரேந்திரமோடி அடிக்கடி சந்திக்கிறார். தமிழகத்தில் அதிமுக கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கும், மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
மாநில வழி கல்வியில் படித்து, கடினமாக உழைத்து ‘நீட்’ தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவர்கள் நீட் தேர்வு வேண்டும் என கேட்பதில் தவறு இல்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என தமிழக அரசு கேட்கிறது. ஆனால், முன்பு வேண்டாம் என்று கூறிய பல்வேறு அரசியல் கட்சிகள் தற்போது நீட் தேர்வு வேண்டும் என கூறுகின்றன. பல்வேறு கட்சிகள் மாணவர்களின் எதிர்காலத்தை சிந்திக்காமல் அரசியல் செய்து வருகிறார்கள்.
மாணவர்களின் வாழ்கையில் விளையாட அரசியல் கட்சியினருக்கு எந்த உரிமையும் இல்லை. சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீண்டும் கொண்டுவந்தால் சட்டசபை கலவர பூமியாக மாறாமல் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் வறட்சி நிலவுகிறது. தமிழ்நாட்டில் தண்ணீரை சேமித்து வைக்கும் வழியை கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டுவரும் கழக ஆட்சிகள் செய்யவில்லை” என்று அவர் கூறினார்.