
முக்கிய அறிவிப்பு :
எல்.கே.ஜி முதல் 9-ம் வகுப்புகளில் இறுதி தேர்வு நடைபெறும் வரை மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது பெரும்பாலும் செப்டம்பர் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். ஆனால் தற்போது பள்ளிக்கல்வித்துறை ஒரு புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது. அதன்படி நடப்பாண்டில் இறுதி தேர்வு நடக்கும் வரை எல்கேஜி முதல் 9 ம் வகுப்பு வரையில் மாணவர்களை பள்ளிகளில் சேர்க்கலாம் என்று கல்வி ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்துள்ளதாக வந்த புகாரையடுத்து இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம் ஆணையர் அறிவித்திருப்பது ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் பல்வேறு அறிவிப்புகள் :
மேலும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 7,8,9 ம் வகுப்புகளில் மாணவர்களை சேர்க்கச் சொல்லி மாவட்ட கல்வி அலுவலர்கள் கடும் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், 9ம் வகுப்பு வரை, இந்த ஆண்டும் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பில், இதுபோன்ற செயல்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இதுபோன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.