Sabarimala Temple : சபரிமலையில் அவதிப்படும் தமிழக பக்தர்கள்.. களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின்

By Ajmal KhanFirst Published Dec 14, 2023, 9:03 AM IST
Highlights

சபரிமலை செல்லும் தமிழக பக்தர்கள் சிரமப்பட்டுவருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும், பாதுகாப்பும் செய்து கொடுக்கப்படும் என கேரள அரசு உறுதியளித்துள்ளது. 
 

சபரிமலையில் அதிகரிக்கும் கூட்டம்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றதாகும். மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதன் காரணமாக கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. தமிழகத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Latest Videos

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நிலக்கல் பார்க்கிங் ஏற்பாட்டில் குளறுபடியால் சுமார் 4 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பம்பையில் இருந்து சந்நிதானம் செல்ல சுமார் 14 மணி நேரத்திற்கும் மேலாக ஆகிறது. இதன் காரணமாக பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். 

 சிரமப்படும் தமிழக பக்தர்கள்

இந்தநிலையில், தமிழக பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து கேரள ஐயப்பன் கோவிலுக்குச் சென்றுள்ள பக்தர்கள் அடிப்படை வசதிகளும் பாதுகாப்பும் இன்றி மிகவும் சிரமப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

 அதனையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை கேரள மாநில தலைமைச் செயலாளர் அவர்களுடன் தொடர்பு கொண்டு தமிழ்நாட்டிலிருந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து உதவிகளையும் ஏற்பாடு செய்து உதவிட கேட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

கேரள அரசு உறுதி

அதன்படி தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா. இ.ஆ.ப., அவர்கள் கேரள மாநில தலைமைச் செயலாளர் திருவி வேணு, இ.ஆ.ப. அவர்களிடம் தொலைபேசி மூலம் கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கையை ஏற்று கேரள மாநில தலைமைச் செயலாளர் அவர்கள் தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு கேரளாவில் தக்க அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் பாதுகாப்பினை உறுதி செய்யவும் கேரள மாநில அரசு சார்பில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

ரூ.6000 நிவாரணத் தொகை யாருக்குக் கிடைக்கும்? தமிழக அரசின் அரசாணை வெளியீடு

click me!