ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை...

First Published Mar 1, 2018, 10:23 AM IST
Highlights
The steps to restore the occupied temple lands


மதுரை
 
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று திருத்தொண்டர்கள் சபைத் தலைவர் ராதாகிருஷ்ணன்  தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வளாகத்தில் உள்ள கோவில் திருமண மண்டபத்தில் கோவில் நிலங்கள் மீட்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலைய துறையின் மண்டல இணை ஆணையர் பச்சையப்பன், கோவில் துணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, திருப்பரங்குன்றம் தாலுகா தாசில்தார் சுரேஷ், வருவாய் ஆய்வாளர் தங்கபாண்டி,

மின்வாரிய கோட்ட பொறியாளர் ராஜாகாந்தி, மதுரை மாநகராட்சி தொழில்நுட்ப உதவியாளர் முருகன், கோவில் கோட்ட பொறியாளர் முருகானந்தம், வரைவாளர் ராமன் மற்றும் அனைத்து துறை ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் திருத்தொண்டர்கள் சபைத் தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினார். இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து சன்னதி தெருவில் பதினாறு கால் மண்டபம் அருகே உள்ள பகுதியை திருத்தொண்டர்கள் சபை தலைவர் ஆய்வு நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து திருத்தொண்டர்கள் சபைத் தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "தமிழகம் முழுவதுமாக கோவில் நிலங்கள் மீட்கப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் சன்னதி தெருவில் பதினாறு கால் மண்டபம் அருகே 30 கல்தூண்கள் கொண்ட பழமை மாறாத கட்டிடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நெல்லையப்பபுரத்தில் 55 வீடுகள் கோவில் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. இது சட்டரீதியாக மீட்கப்படும்.

சன்னதி தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மாநகராட்சியின் வாகன காப்பகம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் நிலங்கள் இருக்கும் இடங்களை கண்டறிந்து அதை மீட்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

click me!