நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் போராட்டம்…

First Published Sep 4, 2017, 7:06 AM IST
Highlights
The revolutionary student youth wing fighters have to ...


தஞ்சாவூர்

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் தஞ்சாவூரில் போராட்டம் நடத்தினர்.

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதால் பிளஸ்–2 தேர்வில் அதிக கட் ஆஃப் மதிப்பெண் பெற்றபோதிலும், நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெறாததால் ஏராளமான மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அப்படி நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியாததால் அரியலூர் மாவட்டம் குழுமூர் காலனி தெருவைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு அனிதாவின் இறப்புக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பு என்று இரு அரசுகளையும் கண்டித்து பல்வேறு கட்சி, அமைப்பினர் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் இரயிலடியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் நேற்று காலை போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் குஷ்தினா தலைமை வகித்தார். மனித உரிமை பாதுகாப்பு மைய நிர்வாகி சதீஷ்குமார், மக்கள் கலை இலக்கிய கழக செயலாளர் ராவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தில், “மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு. இந்த தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்.

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டன.

click me!