
கோவை அருகே ஏடிஎம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற போது அலாரம் அடித்ததால் கொள்ளையன் அங்கிருந்து தப்பி சென்றான்.
கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏ.டி.எம். மையத்தில் நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்றார்.
அப்போது ஏடிஎம் எந்திரத்தில் கையை வைத்ததும் அங்கிருந்து மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தகவல் சென்றுள்ளது.
இதையடுத்து மும்பையில் உள்ள அலுவலக அதிகாரிகள் கோவையில் உள்ள கிளை அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து கோவை கிளை அலுவலகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின்பேரில் போலீசார் குறிப்பிட்ட ஏடிஎம் மையத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் அலாரம் ஒலிக்க தொடங்கியதையடுத்து கொள்ளையன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளான்.
இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். கேமராவில் முகத்தை துணியால் மூடியபடி வாலிபர் ஒருவர் ஏடிஎம் எந்திரத்தை உடைப்பது பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.