புதிதாக அமையவிருக்கும் சாராயக் கடைகளை  தடுத்து நிறுத்த கோரி ஆட்சியரிடம் மனு...

First Published Mar 13, 2018, 7:37 AM IST
Highlights
The petitioner requested the government to stop the newly set up shops.


திருப்பூர்

பல்லடம், செங்கப்பள்ளி பகுதியை சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தங்கள் ஊரில் அமையவிருக்கும் புதிதாக டாஸ்மாக் சாராயக் கடைகளை  அமைக்க கூடாது என்றும், அதனை தடுத்து நிறுத்த கோரியும் ஆட்சியரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். 

மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்தனர்.

அதன்படி, பல்லடம் அருகே பருவாய் மற்றும் கோடங்கிப்பாளையம், ஆறாக்குளம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் மனு ஒன்றை அளித்தனர். 

அதில், "ஆறாக்குளத்தில் இருந்து திருச்சி சாலை செல்லும் பாதையில் உள்ள ஒரு தோட்ட பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை தொடங்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். அந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நூற்பாலைகள் உள்ளன. பெண்கள், மாணவ - மாணவிகள், பொதுமக்கள் தினமும் இந்த பாதையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. 

மேலும், வெளியூர் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் ஆறாக்குளம் பிரிவு பேருந்து நிறுத்தத்தில் நின்று பேருந்து ஏறி செல்வது வழக்கம். 

இங்கு டாஸ்மாக் சாராயக் கடை அமைந்தால் குடிமகன்களால் பல்வேறு இடையூறுகள் ஏற்படும். எனவே, டாஸ்மாக் சாராயக் கடையை இங்கு அமைக்காமல் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

அதேபோன்று, பல்லடம் அருகே அருள்புரம், குங்குமம்பாளையம், பாச்சாங்காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் 7000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். 

இங்கு புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை திறக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்த கடை திறக்கப்பட்டால் அந்த வழியாக மாணவ - மாணவிகள், பெண்கள் செல்ல அச்சமடைவார்கள். சமூக விரோத செயல்களும் அதிகரிக்கும். எனவே, எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

அதேபோன்று, ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி மேட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலத்தை யொட்டி புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். 

கோபி - தாராபுரம் செல்லும் சாலைக்கு அருகில் இந்த கடை அமைய உள்ளது. சின்னக்காடபாளையம், பாச்சாங்காட்டுப்பாளையம், பொன்னாபுரம் போன்ற பகுதிகளும் அருகிலேயே உள்ளன. 

முத்தம்பாளையம், செங்கப்பள்ளி ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் டாஸ்மாக் கடை தங்கள் ஊராட்சிகளில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

எனவே, எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டாம்" என்று கூறியிருந்தனர்..

click me!