
உச்சநீதிமன்ற உத்தரவில் மூடக்கூடிய டாஸ்மாக் பட்டியலில் இல்லாத டாஸ்மாக் ஒன்று காஞ்சிபுரத்தில் இயங்கியபோது, அங்கு கூடிய பாமகவினர் அந்த சாராயக் கடையையும், பாரையும் அடித்து நொருக்கினர்.
தமிழ்நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 3 ஆயிரத்து 400 டாஸ்மாக் சாராயக் கடைகளை மூட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழக அரசு சாராயக் கடைகளை மூடியது.
காஞ்சீபுரம் மாவட்டத்திலும் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடைகள் மூடப்பட்டன.
காஞ்சீபுரம் பேருந்து நிலைய பகுதியில் இரட்டை மண்டபத்தில் உள்ள சித்ரகுப்தர் கோவில் அருகே டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று உள்ளது. அந்த கடை மூடப்படும் பட்டியலில் இல்லை. அதனால் அது, வழக்கம்போல இயங்கியது.
நேற்று ஏராளமான பா.ம.க.வினர் திடீரென அந்த டாஸ்மாக் சாராயக் கடைக்கு முன் திரண்டனர். இவர்களுக்கு காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார்.
அந்தச் சாராயக் கடையை மூடும்படி பாமகவினர் வலியுறுத்தினர். அங்கு பாரில் இருந்த தண்ணீர் பாட்டில் மற்றும் பொருட்களை எடுத்து வெளியே வீசி, டாஸ்மாக் பெயர் பலகையையும் அடித்து நொறுக்கினர்.
உடனடியாக கடை ஊழியர்கள் அந்த டாஸ்மாக் கடையையும், பாரையும் இழுத்து மூடினர். அதற்குப் பின்னரே பா.ம.க.வினர் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.