
கேரளாவில் உள்ள கண்ணகி கோயிலுக்கு சாலை அமைக்கக்கோரி தமிழக வனப்பகுதியில் இருந்து கையில் சிலம்புடன் சமூக ஆர்வலர் போராட்டம் நடத்தினார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடியில் இருந்து 6 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது கண்ணகி கோயில். இந்த கோயிலுக்கு சித்ரா பௌர்ணமி அன்று மட்டும் தமிழகத்தில் இருந்து பக்தர்கள் சென்று வழிபட்டு வர அனுமதிக்கப்படுகின்றனர்.
மற்ற நாட்களில் கண்ணகி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. 6 கி.மீ. தொலைவு மக்கள் மலைப்பாதையில் நடந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், கண்ணகி கோயிலுக்குச் செல்ல சாலை அமைத்துத்தர வலியுறுத்தி கம்பம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா கையில் சிலம்புடன் கண்ணகி கோயிலுக்கு நடந்து சென்றார்.
லோயர்கேம்ப் பளியர்குடிக்கு நேற்று, காலையில் கையில் ஒற்றை சிலம்புடன் சமூக ஆர்வலர் நர்மதாவை வனத்துறையினர் மற்றும் குமுளி போலீசார் தடுத்து நிறுத்தினர். வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்றும் அவர்கள், நர்மதாவிடம் கூறினர்.
இதன் பிறகு, சமூக ஆர்வலர் நர்மதா, கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி கண்ணகி கோயிலுக்கு சாலை அமைக்கவும், கேரளாவில் வேலைக்கு செல்லும் தமிழ்ப் பெண்களுக்கு பாதுகாப்பு கோரியும் முதல் கட்ட போராட்டத்தை தொடங்கினேன். அதைத் தொடர்ந்து ஜனவரி 15 ஆம் தேதி கண்ணகி கோயிலில் பொங்கல் வைக்க சென்றேன்.
போராட்டத்துக்குப் பிறகு தேனி மாவட்ட ஆட்சியர், வனத்துறையினருக்கு அனுப்பிய கடிதத்தில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதாக எனக்கு கடிதம் வந்தது.
எனவே வரும், முழுநிலவு விழாவுக்குள் கண்ணகி கோயிலுக்கு தமிழக வனப்பகுதி வழியாக சாலை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட வந்தேன்.
வனத்துறை அதிகாரிகளின் உறுதிமொழியின்பேரில் நான் திரும்பிச் செல்கிறேன். கண்ணகி கோலுக்கு சாலை அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவேன் என்று சமூக ஆர்வலர் நர்மதா கூறினார். கையில் சிலம்புடன் பெண் ஒருவர் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.