
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இன்றே முடிவுக்கு வர வேண்டும் என்றும், இன்றே பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்றும் தொழிற்சங்கங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 7 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பள்ளி - கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். நேற்று, குடும்பத்துடன் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இன்று தமிழகம் முழுவதும் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தை, போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 7 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நிலைமையை சமாளிக்க அரசு தற்காலிக ஊழியர்களை நியமித்து அரசு பேருந்துகளை இயக்கி வருகிறது. அரசு மற்றும்
தொழிற்சங்கங்கள் பிடிவாதமாக இருப்பதால் போராட்டம் தொடர்ந்து கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.750 கோடி வழங்கப்படும் எனவும், அந்த தொகை பொங்கலுக்கு முன்பாக அவர்களுக்கு அளிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். மேலும், தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வேலை நிறுத்தம் தொடரும் என்று தொழிற்சங்கங்கள் கூறி வருகிறது.
இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் அமர்வு விசாரித்தது. பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் பொங்கலை முன்னிட்டு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பேருந்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுமா? என்று தொழிற்சங்கத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசனை செய்து மாலை 7 மணிக்கு தகவல் தெரிவிப்பதாக தொழிற்சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு எதிரான வழக்கு விசாரணை இன்று மாலை 6 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு தொழிற்சங்கத்தினர் தொழிலாளர்களின் கருத்தை கேட்டு சொல்வதாக தொழிற்சங்கத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை மீண்டும் மாலை 6 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றே ஸ்டிரைக் வாபஸ் பெறப்படும் என தெரிகிறது.