
தமிழ் எழுத்துக்களை யூனிக் கோடுக்கு மாற்றும் புதிய எழுத்துருக்களை உருவாக்கித் தந்த கணினித் தமிழன் தகடூர் கோபி காலமானார்.
தமிழ் எழுத்துரு உருவாக்கத்திலும், பல்வேறு வகையான தமிழ் எழுத்துக்களை யூனிகோடுக்கு மாற்றும் எழுத்துரு மாற்றிகளை உருவாக்கித் தந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவராக கருதப்படுபவர் தகடூர் கோபி என்கிற கோபாலகிருஷ்ணன். தற்போது கணினியில் தமிழை மிக எளிதாக காண முடிகின்றது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் தகடூர் கோபி.
தருமபுரி மாவட்டம் குமாரசாமிப்பேட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் தணிகாசலம் என்பவரின் மகனான இவருக்கு, மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர். கணினி பொறியியலில் பட்டம் படித்துள்ள இவர், சிங்கப்பூர், சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மென்பொருள் துறையில் பணியாற்றியுள்ளார்.
இணைய உலகில் அதியமான் கோபி, தகடூர் கோபி, ஹைகோபி போன்ற பெயர்களில் தளங்களை உருவாக்கி, அதியமான் மாற்றி, தகடூர் தமிழ் மாற்றி ஆகிய எழுத்துரு மாற்றிகளை இவர் வெளியிட்டுள்ளார்.
தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் எழுத்துரு மாற்றிகளை கோபி உருவாக்கியுள்ளார்.மாரடைப்பு காரணமாக ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். இவரது உடல் அன்று நள்ளிரவு தருமபுரியிலுள்ள அவரது வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. நேற்று பகல் 12 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.