
குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது தொடர்பான வழக்கில் தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் வழங்கியுள்ளது.
வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் தமிழகம் முழுவதும் வரலாறு காணாத கடும் வறட்சி நிலவி வருகிறது. சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், வீராணம் உள்ளிட்ட ஏரிகள் 90 சதவீதம் வறண்டு உள்ளன. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆழ்குழாய் கிணறுகளையும், விவசாயத்திற்கு பயன்படும் கிணறுகளையும் வாடகைக்கு எடுக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
இதற்கிடையே தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் உத்தரவை செயல்படுத்தவில்லை என நீதிமன்ற அவமதிப்பு கோரி கே.கே.ரமேஷ் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்ததது. அப்போது வழக்கு விசாரணையை ஜூன் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்த நீதிமன்றம், இது குறித்து விளக்கம் அளிக்கும்படி தலைமைச் செயலாளர் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.