வருமானவரித்துறை வளையத்தில் தமிழகத்தின் 10 கூட்டுறவு வங்கிகள்...!!!

First Published Jul 31, 2017, 2:24 PM IST
Highlights
tamilnadu 10 banks is surrounded in income tax department


மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடை காலத்தில் ரூ. 467 கோடி செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை டெபாசிட் செய்தது தொடர்பாக தமிழகத்தின் 10 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வருமானவரி வளையத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளன.

இந்த கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் வட மாவட்டங்களில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. செல்லாத ரூபாயை மாற்ற ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாத நிலையில், வேளாண் மற்றும் கிராம மேம்பாட்டுக்கான தேசிய வங்கியான  ‘நபார்டு’ வங்கியுடன் இந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் பரிமாற்றம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ வடதமிழக மாவட்டங்களில் உள்ள சில கிராமத்தின் தலைவர்கள், முக்கிய நபர்கள், அரசியல்வாதிகள் விவசாயிகள் கூட்டுறவு வங்கிக்கணக்கை பயன்படுத்தி செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை டெபாசிட் செய்துள்ளனர். ஆனால், நபார்டு வங்கியோ டெபாசிட் செய்யப்பட்ட பணத்துக்கான மூலத்தை அறியவில்லை இதனால், அந்த பணம் குறித்த விவரங்கள் இப்போது வருமானவரித்துறை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

எந்தெந்த கிராமங்களில் உள்ள 10 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்களில் இருந்து பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்துவிட்டோம். இப்போது, நாங்கள் அந்த வங்கிக்கணக்குகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். வடமாவட்டங்களில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 2016ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி காலக்கெடுவுக்கு பின்பும், வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.20 கோடிக்கு மேலான செல்லாத நோட்டுகளை டெபாசிட் செய்ய அனுமதித்துள்ளது’’ எனத் தெரிவித்தார்.

ஆனால், இது குறித்து நபார்டு அதிகாரிகளிடம் கேட்ட போது, “ ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, செல்லாத நோட்டுகளை  டெபாசிட் செய்ய வந்த வாடிக்கையாளர்களின் கே.ஒய்.சி. விவரங்கள்  மற்றும் ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்தோம். வாடிக்கையாளர்கள் பணம் டெபாசிட் செய்கிறார்கள் என்றால் அந்த பணம் எங்கிருந்து வருகிறது என்பதை கேட்பது எங்கள்  பணி இல்லை. சில வங்கிக்கணக்குகளில் கே.ஒய்.சி. விவரங்கள் இல்லாமல் இருக்கலாம், மற்றவகையில் சந்தேகத்திடமான பரிமாற்றம் நடக்க எந்த காரணமும் இல்லை’’ என்றனர்.

தமிழகத்தின் வடமாவட்ட கிராமங்களில் இருக்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஏராளமான செல்லாத ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், சேலத்தைச் சேர்ந்த ஒரு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சோதனையிட்ட வருமானவரித்துறை அதிகாரிகள், பல்வேறு கிராம கூட்டுறவு வங்கிகளின் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் வட தமிழகத்தில் உள்ள கிராமங்களின் தலைவர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் விவசாயிகளின் வங்கிக்கணக்கை பயன்படுத்தி செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையே நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஒருவர் ரூபாய் நோட்டு தடை காலத்தில் ரூ.246 கோடி ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்து, பிரதமர் கரீப் கல்யான்ஜோஜன திட்டத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!