
ஈரோடு
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் – 2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் வருகிற 22–ஆம் தேதி கவன ஈர்ப்பாக ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட இருக்கின்றனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் – 2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று மாலை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியர் எஸ்.பிரபாகரை சந்தித்தனர்.
ஆட்சியரகத்திற்கு வந்த மாவட்டத் தலைவர் ஆர்.அறிவழகன், செயலாளர் ஜி.செந்தில்குமார், பொருளாளர் பி.பெரியசாமி உள்பட முப்பதுக்கும் மேற்பட்டோர், ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், “நாங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சார்நிலை பணித்தொகுதி தேர்வு மூலம் தேர்ச்சிப் பெற்று கடந்த 2012–ஆம் ஆண்டு முதல் ஈரோடு மாவட்ட வருவாய் அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறோம்.
“மற்ற உதவியாளர்களுக்கு உள்ளதுபோல் நேரடி நியமன உதவியாளர்களுக்கும் துணை தாசில்தார் பதவி உயர்வுக்கு நான்கு ஆண்டுகள் பணி செய்தால் போதும் என அறிவிக்க வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி. நேர்காணல் செய்யப்பட்டு நேரடி நியமன உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுவதால் நேர்காணல் பதவியில் இதர துறையினருக்கு வழங்குவதுபோல் ரூ.9 ஆயிரத்து 300 ஊதியம் வழங்க வேண்டும்” உள்ளிட்ட எங்களுடைய ஐந்து அம்ச கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
மேலும் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 16–ஆம் தேதி வருவாய்துறைக்கு மனு அனுப்ப உள்ளோம்.
உரிய தீர்வு கிடைக்காத நிலையில் மாநிலம் முழுவதும் எங்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வருகிற 22–ஆம் தேதி கவன ஈர்ப்பாக ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுக்கவுள்ளோம்” என்று அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.