
தமிழ்நாட்டில் முனைவர் பட்டம் (PhD) பெறும் சுமார் 7,000 பேருக்கு தேவையான கல்வி மற்றும் திறன்கள் இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை சிட்டிசன் ஃபோரம் என்ற அமைப்பு சார்பில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக கல்வித்துறை பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 20 அரசுப் பல்கலைக்கழகங்களில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 7,000 பேர் முனைவர் பட்டங்களைப் பெறுகின்றனர். ஆனால், இந்த பட்டதாரிகள் கல்வித் தரத்திலும், ஆய்வுத் திறனிலும் பின்தங்கியுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்.
'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா ராணுவ வலிமையையும், போர் தளவாடங்களின் உறுதியையும் உலகிற்குப் பறைசாற்றியுள்ளது என்றார். எல்லா இதழ்களும் சேர்ந்ததுதான் ஒரு பூ. அனைத்து இலைகளும் சேர்ந்ததுதான் மரம். அதேபோல நமது பாரத தேசமும் அனைவரையும் உள்ளடக்கி, ரிஷிகளால் உருவாக்கப்பட்டது எனவும் கூறினார்.
2021ஆம் ஆண்டு முதல் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. சிறந்த பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாகவும் உள்ளது. பாரதத்தின் பலமாக இருப்பது 140 கோடி மக்கள்தான் என்றார்.
புதிய தேசிய கல்விக்கொள்கை நாட்டுக்கு அவசியமானது; கல்வி வளர்ச்சிக்கு இன்றியமையாதது என வலியுறுத்தினார். பாரதம் புதிய கல்விக்கொள்கையால் மிக வேகமாக முன்னேறும் என்று நம்பிக்கை தெரிவித்த ஆளுநர் ரவி, சென்னை ஐஐடி 400 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமைகளை பெற்றிருப்பதற்கு பாராட்டு தெரிவித்தார்.