
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 70 வயது பூர்த்தியடைந்து மணிவிழா கண்ட ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட 2000 தம்பதிகளுக்கு ரூ. 2500 மதிப்புள்ள சிறப்புப் பரிசுகளை தமிழக அரசு வழங்கவுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இதைப்பற்றி அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திட்டத்தின் விவரங்களை வெளியிட்டுள்ளார்.
திட்ட விவரங்கள்:
ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மணி விழா கண்ட, அதாவது 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு கொண்ட தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்படவுள்ளது. ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திலும் (மொத்தம் 20 மண்டலங்கள்) தலா 100 தம்பதிகள் வீதம், மொத்தம் 2000 தம்பதிகளுக்கு இச்சிறப்பு வழங்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திலும் 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதிகளுக்கு திருக்கோயில்கள் மூலம் ரூ. 2,500 மதிப்பில் புடவை, வேட்டி சட்டை, மாலை, பூ, மஞ்சள் குங்குமம், மஞ்சள் கயிறு, வாழைப்பழம் உட்பட 11 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கி சிறப்பு செய்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
நிதி ஆதாரம் மற்றும் கண்காணிப்பு:
இத்திட்டத்திற்கான செலவினை முடிந்தவரை உபயதாரர்கள் மூலமும், உபயதாரர்கள் கிடைக்கப்பெறாத நிலையில் திருக்கோயில் நிதி மூலமும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் திருக்கோயில்களில் விளம்பர பதாகைகள் அமைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை தொடர்ந்து கண்காணித்து, சட்டமன்ற அறிவிப்பின்படி நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைய தொடர்புடைய மண்டல இணை ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறநிலையத்துறையின் இதர நலத்திட்டங்கள்:
இந்து அறநிலையத் துறை தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் அன்னதான திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. மேலும், முக்கியமான கோயில்களில் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது. திருவிழாக் காலங்களில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சோர்வடையாமல் இருக்க மோர், தண்ணீர், ஜூஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மொத்தம் 43,748 திருக்கோயில்கள் உள்ளன. அவற்றில் சமணக் கோயில்கள் 22, திருமடங்கள் 45, திருமடங்களுடன் இணைந்த திருக்கோயில்கள் 69, அறக்கட்டளைகள் 1263 ஆகும். இந்து அறநிலையத் துறை, திருக்கோயில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களையும் மீட்டு வருவதுடன், ஆன்மிகத் தலங்களுக்கு இலவசமாக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.
முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய 6 தலங்களுக்கு தலா 200 பக்தர்கள் வீதம், ஆண்டுக்கு 1000 பக்தர்களை 5 கட்டங்களாக இலவசமாக ஆன்மீக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். 60 முதல் 70 வயதுடையோர் இந்த சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.