
சிவகங்கை
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை நடத்த இருந்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்க வேண்டிய அலுவலர்கள் சொன்ன நேரத்திற்கு வராததால் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் ஒன்றரை மணிநேரம் காத்திருந்தனர்.
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை சார்பில் நேற்று விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயிலில் தொடங்கிய இப் பேரணியை, மாவட்ட வருவாய் அலுவலர் து. இளங்கோ தலைமை தாங்கித் தொடக்கி வைத்தார்.
இந்தப் பேரணியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறையின் நல அலுவலர் சகுந்தலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணியில், மாற்றுத் திறனாளிகள் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பலரும் பங்கேற்று "சம உரிமை, சம வாய்ப்பு, முழு பங்கேற்பு" என்ற வாசகங்களை முழக்கமிட்டுச் சென்றனர். பின்னர், இந்தப் பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறைவுற்றது.
இந்த விழிப்புணர்வுப் பேரணி நேற்று காலை 9 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, குறித்த நேரத்தில் மாற்றுத் திறனாளிகள் பள்ளி மாணவ, மாணவியர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்துவிட்டனர்.
ஆனால், பேரணியை தொடக்கி வைக்க வேண்டிய அலுவலர்கள் உரிய நேரத்தில் வராததால், மாணவ,மாணவியர் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், மாணவ, மாணவியர் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.