புதியப் பாடத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
புதியப் பாடத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று புதியப் பாடநூல்கள் குறித்த கருத்தாய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
undefined
ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பதினோறாம் வகுப்புகளுக்கான புதியப் பாடநூல்கள் குறித்த கருத்தாய்வுக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கியூ.ஆர். கோடு முறை தொடர்பாக பயிற்சியளிக்கும் ஆசிரியர்களிடம் நடந்த இந்தக் கூட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலர் உதயச்சந்திரன் தலைமை வகித்தார்.
ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் பொன்.குமார், திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், "அரசுப் பள்ளி மாணவர்கள் கற்றல் திறன் 50 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள புதிய பாட நூல்களில், பாடங்களை சீக்கிரம் நடத்த முடியவில்லை.
அதுமட்டுமின்றி, பாடங்களில் அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்தத் தொடர்பு இல்லை. உலகம் உருவானதற்கான விளக்கம் அறிவியல் பாடத்தில் மட்டுமில்லாமல் சமூகஅறிவியல் பாடத்திலும் இடம்பெறவில்லை. எழுத்துப் பிழைகளும் உள்ளன.
தமிழ் பாடத்தில் செய்யுள் பகுதியில் அந்தந்தப் பாடல்களுக்கான ஆசிரியர்களின் ஊர், பெற்றோர் பெயர்கள் போன்ற விவரங்கள் இல்லை. சமூகஅறிவியல் பாடத்தில், பழமைக் குறித்து விளக்குவதற்குத் தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள்மூலம் கிடைத்த குறீயிடுகள், கல்வெட்டுகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்" போன்ற கருத்துக்கள் ஆசிரியர்கள் தரப்பில் பதிவுச் செய்யப்பட்டன.
இதற்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலர் உதயச்சந்திரன், "இந்தியாவிலேயே முதல் முறையாக கியூ.ஆர். கோடு முறையில் பாடப் புத்தகம் உருவாக்கப்பட்டு இருப்பது தமிழகத்தில் மட்டும்தான்.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ஒன்றரை முதல் இரண்டு இலட்சம் பேர் வரை கியூ.ஆர். கோடு மூலமாக பாடங்களைப் பதிவிறக்கம் செய்கின்றனர். சிந்துச் சமவெளி மக்கள் 'திராவிடர்கள்' என்றக் கருத்து இப்போதும் ஆய்வில் இருக்கிறது.
புதியப் பாடத் திட்டத்தைப் பொருத்தவரை வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு கருத்தும் இடம்பெற்றுள்ளது. பொதுவாக மூன்று நிமிடங்களுக்கு மேல் இணையக் குறிப்புகளைத் தொடர்ந்து வாசிக்க முடியாது. அதனடிப்படையில்தான் பாடத்தில் குறைவான விளக்கங்களை கொடுத்துள்ளோம்.
பாடப் புத்தகத்தில் வருடங்கள் மற்றும் எண்களுக்கு முக்கியத்துவம் தரும்போது, அதனைப் புரிந்துப் படிப்பதற்கு மாறாக மனப்பாடம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதனைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் இந்தப் புதியப் பாடத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
மூத்த மொழியான தமிழை, சமஸ்கிருதத்தின் மூலம் நிலைநிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. அகில இந்தியத் தேர்வுகளில் பின்தங்கியிருக்கும் தமிழகத்தின் நிலையை புதிய பாடத் திட்டம் நிச்சயம் மாற்றியமைக்கும்.
கடந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பாடங்களில் இருந்தே வினாக்கள் இடம்பெற்றன. அதில் 99% வினாக்கள் புதியப் பாடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. குடிமைப் பணித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பிளஸ்-1 அரசியல் அறிவியல், வரலாறு மற்றும் புவியியல் பாடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன" என்று அவர் தெரிவித்தார்.