
தருமபுரி
பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தருமபுரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ளது காவேரிபுரம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மனைவி மங்கம்மாள். இவர்களுடைய மகள் கௌசல்யா (17). இவர் கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வணிகவியல் படித்தார்.
இந்த நிலையில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் மூன்று பாடங்களில் கௌசல்யா தோல்வி அடைந்தார். இதனால் மாணவி மனமுடைந்த நிலையில் காணப்பட்டதோடு விரக்தியிலும் இருந்தார் கௌசல்யா.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் கௌசல்யாவை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி கௌசல்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடத்தூர் காவலாளர்கள் விரைந்து சென்று கௌசல்யாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.