
போக்குவரத்துக் காவல் நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் அந்த மனிதத் தலை கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில், அருகில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் இருந்து, மனித தலையை தெரு நாய் தூக்கி வந்து வீசியது தெரிந்தது.
ஒசூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தின் எதிரில் நேற்று மதியம், ஒரு மனித தலை கிடந்தது. இதை பார்த்ததும், அவ்வழியாக சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அதிர்ச்சியடைந்தனர்
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். யாராவது கொலை செய்து, தலையை காவல் நிலையம் முன்பு வீசினார்களா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என தீவிரமாக விசாரித்தனர்.
அப்போது, காவல் நிலையம் அருகில் உள்ள மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் இருந்த சடலத்தின் தலை காணாமல் போனதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், சாலையில் கிடந்த தலையை கைப்பற்றி, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு விசாரித்தபோது, பிரேத பரிசோதனை செய்த பின்னர், சடலத்தையும், தலையையும் அங்கேயே வைத்துவிட்டு, ஊழியர்கள் வெளியே சென்றுவிட்டனர். அப்போது, பிரேத பரிசோதனை அறையில் நுழைந்த தெரு நாய், சடலத்தின் தலையை தூக்கி சென்று சாலையில் வீசியது தெரியவந்தது. அதன்பின்னர், போலீசார் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.