
சென்னை சைதாப்பேட்டை தாடாண்டர் நகர் அரசு ஊழியர் குடியிருப்பில் ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகையை திருடர்கள் அள்ளி சென்றுள்ளனர்.
சென்னை தாடாண்டர் நகர் அரசு ஊழியர் குடியிருப்பில் வசிப்பவர் பியூலா தீபம்(55). பள்ளிக்கரணையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக உள்ளார். இவரது கணவர் மறைந்துவிட்டார். தற்போது தனியாக வசித்து வருகிறார்.
வீட்டில் யாரும் இல்லாததால் தினமும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு செல்வது வழக்கம். இன்று பள்ளியில் இருந்த பியூலாவிற்கு பக்கத்து வீட்டிலிருந்து போன் வந்துள்ளது. வீடு திறந்து கிடக்கிறது எங்கே போனீர்கள் என்று கேட்டுள்ளார்கள்.
இல்லையே நான் பள்ளியில் தான் இருக்கிறேன் , வீட்டை பூட்டிவிட்டுத்தானே வந்தேன் என்று அலறி அடித்து தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார். வீட்டில் அவர் பூட்டியிருந்த பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் அவரது வீட்டின் பீரோவிலிருந்து 40 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 50 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.
இந்த திருட்டு குறித்து ஆசிரியை அளித்த புகாரின் பேரில் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.