
குரூப் 2, 2ஏ தேர்வு எழுத வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித்தேர்விகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மே 21 ஆம் தேதி குரூப் 2, 2A தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டது. அதன்படி, TNPSC குரூப் 2, 2A தேர்வுகளுக்கான ஹால் டிக்கெடை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpsc.gov.in இல் வெளியிட்டுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தங்கள் ஒருமுறை பதிவேற்ற (OTR) கணக்கு வாயிலாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்இ அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 03/2022, நாள் 23.02.2022-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - || (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) (தொகுதி -|| மற்றும் தொகுதி IIA) பதவிக்கான முதல் நிலைத் தேர்வு (கொள்குறிவலை) 21.05.2022 முற்பகலில் மட்டும் நடைபெற உள்ளது.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட்டை தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in -ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் குரூப் 2, 2ஏ தேர்வில் தேர்வர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.