செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஏப்ரல் 1இல் விசாரணை: வெளியே வந்தால் அண்ணாமலைக்கு சிக்கல்!

By Manikanda Prabu  |  First Published Mar 23, 2024, 3:43 PM IST

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது


சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர மறுத்து விட்டது.

Tap to resize

Latest Videos

இருப்பினும், மருத்து ஜாமீன் கோராமல் சாதாரண ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறும், அங்கு ஜாமீன் மறுக்கப்பட்டால் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறும் செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி 3ஆவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர மறுப்பு  தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி 2ஆவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவின் மீதான விசாரணையின்போது, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி குறித்து நீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியது. எனவே, ஜாமீன் கிடைக்க அமைச்சர் பதவி இடையூறாக இருக்கக் கூடாது என்பதால், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து, வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக,  திமுக முன்னாள் அமைச்சர்  செந்தில்பாலாஜி  தனக்கு ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிருப்தியில் விஜயதாரணி: அடுத்த கட்ட திட்டம் குறித்து ஆலோசனை?

இந்த நிலையில், இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 1ஆம் தேதியன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வரவுள்ளது. அன்றைய தினம், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தால், அடுத்த ஓரிரு நாளில் அவர் வெளியே வந்து விடுவார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதிதான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே, அதற்கு முன்பு செந்தில் பாலாஜி வெளியே வரும் பட்சத்தில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அண்ணாமலைக்கு மட்டுமல்ல, கோவையின் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கும் அது சவாலான விஷயமாக இருக்கும் என தெரிகிறது.

மக்களவைத் தேர்தலில் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலம் உற்று கவனிக்கப்படும் நிலையில், செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்தால், கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு ஊக்கமாக இருக்கும் என்று திமுகவினர் நம்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!