
வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 பாடங்களை மாற்றி அமைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ப்ளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை தொடங்குகிறது.இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டாயிரத்து 427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வுகளைக் கண்காணிக்க 6 இயக்குனர்கள், 20 இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வுகளின்போது முறைகேடுகளைத் தடுக்க மாவட்டம்தோறும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சுமார் 300 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
மேலும் பொதுத் தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்காக தமிழக அரசு சார்பில் பிரத்யேகமாக வழிகாட்டு மையங்கள் திறக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த மையங்களில் தேர்வு தொடர்பான விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.தனியார் அமைப்புகளுடன் இணைந்து மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்காக பயிற்சி அளிக்கப்படும் என்றும் செங்கோட்டையன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 பாடங்களை மாற்றி அமைப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.