வருங்கால தலைமுறையை செதுக்கும் ஆசிரியர்களை இனியும் வதைக்காதீர்கள்.. சீமான் வேண்டுகோள்

Published : Jan 02, 2026, 02:32 PM IST
seeman

சுருக்கம்

அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு குறைவான ஊதியம் வழங்கி திமுக அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது என சீமான் குறிப்பிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கடந்த 2009ஆம் ஆண்டு சூன் மாதம் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, அதற்குமுன் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதைவிட 3000 ரூபாய் அளவிற்குக் குறைவானதாக அடிப்படை ஊதியத்தை வழங்க முடிவெடுத்தது ஐயா கருணாநிதி அவர்கள் தலைமையிலான அன்றைய திமுக அரசு. அடிப்படை ஊதியம் குறைவானதன் விளைவாக மொத்த ஊதியமானது ரூபாய் 15000 அளவிற்குக் குறைவாக இன்றளவும் வழங்கப்படுகிறது. அதன்பின் 10 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த அதிமுக அரசும், இடைநிலை ஆசிரியரிடையே நிலவும் ஊதிய முரண்பாட்டைக் களைய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரே அரசின் நிர்வாகத்தின் கீழ் ஒரே வகையான பணிபுரியும் ஆசிரியர் பெருமக்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு மட்டும் குறைவான ஊதியம் வழங்குவது எவ்வகையில் நியாயமானதாகும்?

ஆசிரியப் பெருமக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர் பெருமக்கள் கடந்த 26.04.2018 அன்று சென்னை – வள்ளுவர்கோட்டம் அருகேயுள்ள மகளிர் பள்ளி வளாகத்தில் முன்னெடுத்த தொடர்போராட்டத்தில் தோள்கொடுத்துத் துணை நிற்கும் விதமாக நேரில் சென்று ஆதரவளித்தேன். அதன்பின்னர், அன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கிய பரிந்துரைக் கடிதத்தையேற்று அப்போராட்டம் தற்காலிகமாகத் திரும்பப்பெறப்பட்டபோதிலும், எட்டு மாதங்களைக் கடந்தும் எவ்விதத் தீர்வும் வழங்கப்படாத நிலையில் மீண்டும் 27.12.2018 அன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் ஆசிரியப் பெருமக்கள் முன்னெடுத்த அறவழிப்போராட்டத்திலும் நேரில் பங்கேற்று ஆதரவளித்தேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஐயா ஸ்டாலின் அவர்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்ததும், அதே கோரிக்கையைத் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ததையும் நம்பி ஆசிரியப் பெருமக்கள் தங்களது முழுமையான ஆதரவினை அளித்து திமுகவினை ஆட்சியில் அமர்த்தினர். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்களாகியும் தேர்தல் வாக்குறுதிப்படி, சம ஊதியம் வழங்காமல் திமுக அரசு ஏமாற்றி வருவதைக் கண்டித்து மீண்டும் ஆசிரியப் பெருமக்கள் கடந்த 2022 டிசம்பர் மாதம் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் முன்னெடுத்த தொடர்ப் போராட்டத்தின் போதும், 2023 அக்டோபர் மாதம் முன்னெடுத்த தொடர்ப் போராட்டத்தின் போதும், 2024, 2025 ஆம் ஆண்டுகளில் முன்னெடுத்த போராட்டங்களின் போதும் நேரில் சென்று ஆதரவளித்தேன். ஆனால், வழக்கம்போல் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்ற வாக்குறுதியளித்துப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த திமுக அரசு இன்றுவரை அதனை நிறைவேற்றவில்லை என்பது பெருங்கொடுமையாகும்.

ஆசிரியப் பெருமக்கள் தங்கள் வாழ்வாதார அடிப்படை உரிமையைப் பெறவேண்டி கடந்த 15 ஆண்டிற்கும் மேலாகத் தொடரும் இரு திராவிடக் கட்சி அரசுகளின் இத்தகைய பணியாளர் விரோதப் போக்கிற்கு எதிராக எத்தனை அறவழிப்போராட்டங்களை முன்னெடுத்தும் இன்றுவரை அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. தற்போது மீண்டும் தங்களின் நியாயமானக் கோரிக்கைகள் வெல்ல கடந்த 26.12.2025 முதல் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியப்பெருமக்களின் கோரிக்கைகள் வெல்ல நாம் தமிழர் கட்சி தமது முழுமையான ஆதரவை அளிக்கிறது.

ஆகவே, நாட்டின் வருங்காலத் தலைமுறையைச் செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர் பெருமக்களை இனியும் வாட்டி வதைக்காமல், ஊதியப் பாகுபாட்டைக் களைந்து, அனைத்து இடைநிலை ஆசிரியப் பெருமக்களுக்கும் சம ஊதியம் வழங்க உடனடியாக அரசாணை வெளியிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TN Govt Scheme: தங்கைகளுக்கு கிடைக்கப்போகும் 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும்.! ஜூன் மாதம் முதல் அண்ணன் சீர் திட்டம் நடைமுறை?!
Jothimani Vs TVK Vijay: விஜய் எல்லாத்துக்கும் உங்களுக்கு ஆதரிக்க முடியாது.. பாஜக வழியில் தவெக.. கொதிக்கும் ஜோதிமணி!