பார்வையாளர்களை பதம் பார்த்த சல்லிக்கட்டு காளைகள்; மொத்தம் 23 பேரை முட்டி தூக்கின...

First Published Mar 7, 2018, 6:20 AM IST
Highlights
sallikattu bulls attacked the audience total of 23 people were hit


புதுக்கோட்டை 

புதுக்கோட்டையில் நடந்த சல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடிவீரர்கள் எட்டு பேர், காளையின் உரிமையாளர்கள் ஐந்து பேர், பார்வையாளர்கள் பத்து பேர் என மொத்தம் 23 பேர் காளைகளிடம் முட்டு வாங்கி காயம் அடைந்தனர்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கோவிலூரில் உள்ளது முத்துமாரியம்மன் கோவில். இந்தக் கோவிலில் மாசி மக திருவிழாவையொட்டி சல்லிக்கட்டு நடைப்பெற்றது. 

இதனையொட்டி நேற்று காலை 738 காளைகளையும், 230 மாடுபிடி வீரர்களையும் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தபின்னர், களத்தில் இறங்க அனுமதித்தினர். 

திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் வந்திருந்தன.

இந்த சல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் நாட்டு மிராசுகள் முன்பு வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. 

அதனைத் தொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்துவிடப்பட்டன. சீறிபாய்ந்த காளைகளை மாடு வீரர்கள் அடக்கினர். சில காளைகள் வீரர்களிடம் சிக்காமல் துள்ளி குதித்து ஓடின. 

இதில் மாடுபிடிவீரர்கள் எட்டு பேரும், காளையின் உரிமையாளர்கள் ஐந்து பேரும், பார்வையாளர்கள் பத்து பேரும் என மொத்தம் 23 பேர் காளைகளிடம் முட்டு வாங்கி காயம் அடைந்தனர். அவர்களுக்கு வாடிவாசலில் இருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் இருவர் மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் காளையை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், மிக்சி, வெண்கல அண்டா, சில்வர் பாத்திரங்கள், பீரோ, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. 

இந்த சல்லிக்கட்டை காவல் அதிகாரிகள் இளங்கோவன், அப்துல்முத்தலிப், தாசில்தார் ரெத்தினாவதி மற்றும் ஆலங்குடி, கோவிலூர் சுற்று வட்டார கிராமமக்கள் கண்டுகளித்தனர். 

பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உத்தரவின்பேரில் காவலாளர்கள் செய்திருந்தனர்.  

click me!