ஆரணியில் சோகம்: தொடர் மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி; மூவர் பலத்த காயம்…

First Published Nov 1, 2017, 6:37 AM IST
Highlights
Sadness in Arani wall of the house collapses in the rain one dead Triple Injury


திருவண்ணாமலை

ஆரணியில் தொடர் மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலியானாள். அவளது குடும்பத்தில் மேலும் மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இலாடப்பாடி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வேல்முருகன். இவர் மனைவி சத்யா, மகள்கள் நித்யா (13), ஆனந்தி (11), மகன் மதியழகன் (10) தந்தை பாக்கியநாதன் (60) ஆகியோருடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த மூன்று நாள்களாக ஆரணி பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் இவரது குடிசை வீடு வலுவிழந்தது. மண் சுவரும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென சுவர் இடிந்து விழுந்தது. அப்போது இடிபாடுகள், தூங்கிக் கொண்டிருந்த நித்யா, ஆனந்தி, மதியழகன் பாக்கியநாதன் ஆகியோர் மீது விழுந்தது. அவர்கள் அலறிய சத்தத்தைக் கேட்டு வேல்முருகன் - சத்யா ஆகியோர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.

பின்னர் நால்வரையும் அவர்கள் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தலையில் பலத்த காயமடைந்த நித்யாவின் உடல்நிலை மோசமானதால் அவரை மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூவரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த நித்யா, ஆரணி அருகே கல்பூண்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஆரணி தாசில்தார் சுப்பிரமணி, வருவாய் ஆய்வாளர் தேவி மற்றும் அதிகாரிகள் நிகழ்விடத்தை பார்வையிட்டனர். பின்னர் அதுகுறித்து ஆட்சியருக்கு அறிக்கையும் அனுப்பி வைத்தனர். 

தொடர் மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை எழுப்பியுள்ளது.

click me!