
பெரம்பலூர்
டெங்கு கொசுப் புழுக்கள் உருவாகும் வகையில் சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருந்த மூன்று திரையரங்குகளுக்கு பெரம்பலூர் ஆட்சியர் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடி உத்தரவிட்டார்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பராவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நகராட்சி நிர்வாகத்தின் மூலம் புகை மருந்து அடித்தல், தண்ணீர் தேங்கவிடாமல் சரி செய்தல், டெங்கு கொசுப் புழுக்களை கண்டறிந்து அழித்தல் மற்றும் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று டெங்கு தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
அப்போது, பெரம்பலூர் நகரில் உள்ள திரையரங்குகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அதில், திரையரங்குகளில் டெங்கு கொசுப் புழுக்கள் உருவாகும் வகையில் சுற்றுபுறத்தை அசுத்தமாக வைத்திருந்ததால் ரூ.10 ஆயிரம் வீதம் மூன்று திரையரங்குகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதத் தொகை விதித்தார்.
பின்னர், “மக்கள் டெங்கு காய்ச்சல் பராவமல் தடுக்க தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும்” என்று ஆட்சியர் மக்களிடம் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர், வருவாய் கோட்டாட்சியர், சுகாதாரத்துறை துணை இயக்குநர், நகராட்சி ஆணையர், வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.