
கூடலூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் காட்டுயானை புகுந்ததால் ரூ..1 இலட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதம் அடைந்தன.
நெல்லிக்கரை பகுதியில் காட்டு யானை வாழைகளை அடிக்கடி சேதப்படுத்தி வருகிறது என்று அப்பகுதி விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். வனப்பகுதியில் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் காட்டு யானைகள் ஊருக்குள் அதிகளவு வருவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கூடலூர் அருகே மேல்கூடலூர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணி முதல் குட்டியுடன் கூடிய மூன்று காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் புகுந்ததைக் கண்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓடினர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு, பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதிகாலை 4 மணிக்கு யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.
அதேபோல கூடலூர் அருகே தொரப்பள்ளி அள்ளூர்வயல் பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டு யானை ஒன்று சுற்றித் திரிகிறது. இது, வனப்பகுதியில் இருந்து வெளியேறி, விவசாய நிலத்துக்குள் புகுந்து அங்குள்ள பயிர்களை தின்று வருகிறது.
நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த விசுவநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் காட்டு யானை ஒன்று திடீரென நுழைந்தது. அந்த யானை தோட்டத்தில் பயிரிடப்பட்ட வாழை, தென்னை, பாக்கு பயிர்களை சாப்பிட ஆரம்பித்தது.
இதனையடுத்து காட்டு யானையை அப்பகுதி மக்கள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த யானை காட்டுப்பகுதிக்கு திரும்பாமல் தோட்டத்திலேயே வலம் வந்து கொண்டிருந்தது. இதனால் ரூ.1 இலட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதம் அடைந்தது என்றும், தனக்கு நிவாரணம் தர வேண்டும் என்றும் வன அலுவலர், தாசில்தாருக்கு கோரிக்கை மனு அளித்தார் விவசாயி விசுவநாதன்.