பட்டாசு வியாபாரி வீட்டில் அதிகாலையில் நடந்தேறிய கொள்ளை; 50 சவரன் நகை, 5 இலட்சம் பணம் அபேஸ்...

First Published Jun 27, 2018, 10:24 AM IST
Highlights
robbery in early morning in crackers businessman house 50 pounds jewelry 5 lakhs money theft...


திருவள்ளூர்

திருவள்ளூரில் பட்டாசு வியாபாரி வீட்டில் அதிகாலையில் புகுந்த மர்ம நபர்கள் 50 சவரன்  நகை மற்றும் ரூ.5 இலட்சத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடினர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளது மகாலிங்க நகர். இங்கு அல்லா பகாஷ் (56) என்ற பட்டாசு வியாபாரி வசித்து வருகிறார். 

மாந்திரீகம் தொழிலும் செய்து வரும் இவர் தனது வீட்டின் முன்புறம் சிமெண்டு ஓடு போட்ட தனியறையில் உள்ள இரண்டு பீரோக்களில் நகை மற்றும் பணம் வைப்பது வழக்கம்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் அல்லா பகாஷ் மனைவி சுபேதா வழக்கம்போல தொழுகை செய்வதற்காக எழுந்தார். வீட்டின் முன்பக்க கதவை திறக்க முயன்றார். ஆனால், வெளிப்புறமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தால் அதனை திறக்க முடியாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து சுபேதா, கதவின் உள்புறம் உள்ள மேல்தாழ்பாளை திறந்து வேகமாக கதவை இழுத்ததால் கதவு திறந்து கொண்டது. பின்னர், வெளியே சென்ற சுபேதா, மர்ம நபர்கள் சிலர் டார்ச்லைட்டுடன் வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து தப்பி ஓடுவதை பார்த்தார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த சுபேதா, தனது கணவர் அல்லா பகாஷிடம் தெரிவித்தார். வீட்டின் முன்புறம் இரும்பு கேட்டின் அருகே சென்று பார்த்தபோது அதன் பூட்டு உடைக்கப்பட்டு, வெளிபுறம் இருந்த மின்விளக்குகள் அனைத்தும் கழற்றி எடுக்கப்பட்டிருந்தது.

மேலும், வீட்டின் வாசல் கேட்டையொட்டி சிமெண்டு ஓடு போடப்பட்டு உள்ள தனியறையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த இரண்டு பீரோக்களையும்  உடைத்து அதிலிருந்த 50 சவரன் நகை மற்றும் ரூ.5 இலட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டது தெரியவந்தது.

பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். 

அல்லா பகாஷ் தனது வீட்டின் வெளிப்புறம் தனி அறையில்தான் நகை மற்றும் பணத்தை வைத்திருப்பார் என்பதை முன்கூட்டியே அறிந்தவர்கள்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என காவலாளர்கள் கருதினர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து கைரேகை தடயங்களை சேகரித்தனர். மர்ம கும்பலை கூண்டோடு பிடிக்க இரண்டு காவல் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆய்வாளார் குமரன் தலைமையில் ஆரம்பாக்கம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!