பேரணி, ஆர்ப்பாட்டம், இரயில் மறியல், தர்ணா - எல்லாம் மோடியின் வருகையை  எதிர்த்துதான்...

First Published Apr 13, 2018, 6:40 AM IST
Highlights
rally demonstration rail block darna - everything is against Modi arrival ...


திருவாரூர்

மோடியின் தமிழகம் வருகையை எதிர்த்து திருவாரூரில் பேரணி, ஆர்ப்பாட்டம், இரயில் மறியல், தர்ணா என பல்வேறு போராட்டங்கள் நடைப்பெற்றன.

பேரணி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், பிரதமர் மோடி தமிழகம் வருகையை எதிர்த்தும், திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் எரவாஞ்சேரியில் திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் கண்டன பேரணி நடத்தினர்.

மணவாளநல்லூர் சாலை வளைவில் தொடங்கிய இந்த பேரணிக்கு குடவாசல் திமுக ஒன்றியச் செயலாளர் ஜோதிராமன் தலைமை வகித்தார். பேரணி எரவாஞ்சேரி கடைத்தெரு வழியாக பெரியார் சிலை வரை நடைபெற்றது. பின்னர்,  அங்கு மத்திய அரசு மற்றும் பிரதமரைக் கண்டித்து முழக்கமிட்டனர். 

இதில் திமுக, காங்கிரசு, கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடியின் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூர் திரு.வி.க. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி வாசலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதில், ஏராளமான மாணவர்கள் கருப்பு உடை அணிந்து பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இரயில் மறியல்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்தும், மோடியின் தமிழகம் வருகையை எதிர்த்தும், காவிரி மீட்புக் குழு சார்பில் திருவாரூர், சிங்களாஞ்சேரி இரயில்வே கேட் அருகே இரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, இரயில் மறியலில் ஈடுபட முயன்ற காவிரி மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜெய்சிங், நிர்வாகிகள் ராஜா, கார்த்திக், ஆனந்தகுமார் ஆகிய நால்வரை நேற்று காலை காவலாளர்கள் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

தர்ணா

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும், மோடியின் தமிழகம் வருகையை எதிர்த்தும், திருவாரூரில் தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

புதிய இரயில் நிலையம் அருகே நடைபெற்ற  இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் டி. சீனிவாசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இதில், மாவட்டச் செயலாளர் வி. முனியன், பொருளாளர் மீனாட்சிசுந்தரம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

click me!