
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் நாளை தீபாவளியன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவ மழையால் தமிழகத்தில் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மட்டுமே பயன்பெறுகிறது. பெரும்பாலும் வட கிழக்கு பருவ மழையால் மட்டுமே தமிழகம் பயன்பெறுகிறது.
இந்நிலையில் தென் மேற்கு பருவமழையால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர்,ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதலே சாரல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
சென்னையில் இன்று அதிகாலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் மத்திய வங்கக் கடலில் குறைந்த தாழ்வுப்குதி உருவாகியுள்ளதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வட மேற்கு திசையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தீபாவளி தினமான நாளை தமிழகம் முழுவதும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வட கிழக்கு பருவமழை இம்மாத இறுதிக்குள்ளோ அல்லது நவம்பர் முதல் வாரத்திலோ தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு பலத்த மழை பெய்ய வாப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.