
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பிலும், அதிமுக சார்பிலும், நடிகர் சங்கம் சார்பிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் நடிகர் ராதா ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்து இருக்கிறது. அதில் ஒரு அரசியல் கட்சி, தனியார் அமைப்பு, பிரபல நடிகரின் ரசிகர்கள் என சாயம் பூசப்படும்.
ஆனால், தற்போது ஜல்லிக்கட்டு போட்டிக்காக நடத்தப்படும் போராட்டம் எந்த தலைமையையும் சேர்க்காமல், எந்த சாயமும் பூசாமல் நடத்தப்படுகிறது. இது அனைத்து அரசியல் கட்சிகளையும், சினிமா நட்சத்திரங்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவர்களே ‘ரியல் ஹீரோக்கள்’. இங்கு எந்த நடிகரின் பெயரும், பேச்சும் எடுப்படவில்லை. நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தால் ஏராளமான பொதுமக்கள் குவிந்துவிடுவார்கள்.
ஆனால், தற்போது நடிகர்கள் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்துக்கு யாரும் ஆதரவு தரவில்லை. மாறாக அனைவரும் மெரினாவுக்கு சென்றுவிட்டனர். நடிகர் சங்கத்தினர் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி நடத்திய போராட்டம், எடுபடாமல் போய்விட்டது.
இயற்கையாகவே மாணவர்கள் ஜெயித்துவிட்டனர். அவர்கள் தான் ரியல் ஹீரோக்கள். இனி எந்த நடிகரும் முதலமைச்சர் பதவிக்கு ஆசை வைக்க மாட்டார்கள். “நான் தான் அடுத்த முதல்வர்” என “உதார், பீலா” எல்லாம் விட முடியாது. மக்கள் தெளிவாகிவிட்டனர். குறிப்பாக மாணவர் அமைப்புகள் ஒன்று சேர்ந்துவிட்டனர்.