
முதுநிலை மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு பிரச்னைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான 50 % இட ஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதைதொடர்ந்து இன்று தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க மாநில தலைவர் செந்தில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது முதுநிலை மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் எனவும், அவசரமில்லாத அறுவை சிகிச்சைகள் மே 3 ஆம் தேதி நிறுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மே 8 ஆம் தேதி ஒருநாள் அடியாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் எனவும், மே 2 முதல் 10 ஆம் தேதி வரை அடுத்தடுத்து தொடர் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
அரசு மருத்துவர்களின் கோரிக்கையும் தமிழக அரசின் கோரிக்கையும் ஒன்றுதான் எனவும், நீதிமன்றம் மூலம் இதற்கு தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனவும், நிலுவையில் உள்ள வழக்கு வரு மே 2 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நோயாளிகள் பாதிக்காத வகையில் மருத்துவர்கள் கோரிக்கை வைக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.