பெட்ரோல், டீசலுக்கும் ஜிஎஸ்டி வேண்டும் - தமிழ்நாடு பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்…

First Published Sep 7, 2017, 7:56 AM IST
Highlights
put gst for Petrol and Diesel - Tamil Nadu Bus Owners Association


ஈரோடு

பெட்ரோல், டீசலுக்கும் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பேருந்து உரிமையாளர் சங்கங்களின் சம்மேளன மாநிலப் பொதுச் செயலாளர் தர்மராஜ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளனத் தலைவராக தங்கராஜ், மற்றும் பொதுச் செயலாளராக தர்மராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஈரோடு மாவட்டப் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு பேருந்து உரிமையாளர் சங்கங்களின் சம்மேளன மாநிலப் பொதுச் செயலாளர் தர்மராஜ் பேசியது:

“தற்போது தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து கொள்ளலாம் என்ற அறிவிப்பால் கடந்த சில நாள்களிலேயே லிட்டருக்கு ரூ.3 வரை விலை உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் ஒரு பேரல் 140 டாலராக இருந்தபோது ஒரு லிட்டர் டீசல் ரூ.67-ஆக இருந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை 40 முதல் 50 டாலராக குறைந்துவிட்ட நிலையிலும் அதே விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஜிஎஸ்டியை பெட்ரோல்,  டீசலுக்கு அமல்படுத்தவில்லை. இதன் காரணமாக பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை என அண்டை நாடுகளை விட இந்தியாவில்தான் பெட்ரோல்,  டீசல் விலை மிக, மிக அதிகமாக உள்ளது.

எனவே, சர்வதேசச் சந்தையில் உள்ள கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவிலும் பெட்ரோல்,  டீசல் விலையை குறைத்து, ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த வேண்டும்.

ஜிஎஸ்டி இல்லாத காரணத்தால் சேவை வரி, சுங்க வரி என கிட்டத்தட்ட 58 சதவீதம் வரையிலும் வரி விதிக்கப்படுகிறது.  எனவே, பெட்ரோல், டீசலுக்கும் ஜிஎஸ்டியை அமல்படுத்த வேண்டும்.

குளிர்ச் சாதன வசதி இல்லாத வாகனங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை. குளிர்ச் சாதனப் பேருந்துகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியும், சுற்றுலா வாகனங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வசூலிக்கும் தொகையில் டீசலுக்கே 50 சதவீத வரை செலுத்த வேண்டியுள்ளது. எனவே, சுற்றுலா செல்வோருக்கான ஜிஎஸ்டியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 435 வாகன சுங்க வரி வசூல் மையத்திலும் 1997-ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்தின் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.

தற்போது, 2008-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சட்ட விதிமுறைகளால் சுங்கவரி மையங்களில் பலமுறை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  இதில் உள்ள குளறுபடிகளை அகற்ற வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில், சம்மேளனத்தின் மாவட்டத் தலைவர் பழனிசாமி, செயலாளர் விவேகானந்தன், பொருளாளர் குப்புசாமி,  சம்மேளனப் பொருளாளர் ராஜாபாதர், தமிழ்நாடு பேருந்து உரிமையாளர்கள் நிதி நிறுவனத் தலைவர் சிதம்பரம்,  பேருந்து உரிமையாளர்கள் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் டிஎன்டி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

tags
click me!