
வரும் 17 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் மையமான சென்னை தலைமைச் செயலகத்துக்கு வாக்குச் சீட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 25 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து வரும் 17 ஆம் தேதி நாடு முழுவதும் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இத் தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் இருவரும் நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்து எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக இதற்கான ஓட்டு சீட்டுகள் தமிழகத்திற்கு வந்துள்ளது.
ஆயுதப்படை பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்ட ஓட்டுசீட்டுகள் தலைமை செயலகத்தில் பேரவை செயலாளர் பூபதி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.