Nanjil Sampath; என் உயிருக்கு ஆபத்து..! முதலமைச்சர் ஸ்டாலினை டுவிட்டரில் டேக் செய்து கதறிய நாஞ்சில் சம்பத்

By Ajmal KhanFirst Published Jun 16, 2022, 1:12 PM IST
Highlights

தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தமிழக முதலமைச்சரை டேக் செய்து பேச்சாளர் நாஞ்சில் சம்பத் டுவிட்டரில் பதிவிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

உயிருக்கு ஆபத்து

தனது பேச்சால் மக்களை மயக்கக்கூடியவர் நாஞ்சில் சம்பத், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது இருந்த பற்று காரணமாக அவர் போலவே கருப்பு துண்டு அணிந்து மேடைகளில் தனது பேச்சால் பொதுமக்களை கவர்ந்து வந்தார். திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டவர்களை மிகவும் கடுமையாக விமர்சித்து வந்தார்.இதனிடையே  வைகோவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுகவில் 2011 ஆம் ஆண்டு தன்னை இணைத்துக்கொண்டார். அவரின் சிறப்பான பணியை பாராட்டி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, நாஞ்சில் சம்பத்திற்கு இன்னோவா காரை பரிசாக அளித்து கவுரவப்படுத்தினார். ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவில் முக்கிய பிரமுகராக வளம் வந்த நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு டிடிவி தினகரன் அணியில் இணைந்து செயல்பட்டார். அப்போது தினகரனின் செயல்பாடு பிடிக்காத காரணத்தால் அமமுகவில் விலகி திமுகவிற்கு ஆதரவான கருத்துகளை தற்போது பேசி வருகிறார் நாஞ்சில் சம்பத் ,

Y பிரிவு பாதுகாப்பு கொண்டவரால் ஆபத்து

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதுவை துனை நிலை ஆளுநரான தமிழிசையை  ஒருமையில் விமர்சித்தாக புகார் எழுந்தது. தன்னை ஒருமையில் விமர்சிப்பது வேதனை அளிப்பதாக தமிழிசை சவுந்திர்ராஜன் தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளித்த நாஞ்சில் சம்பத், தமிழிசையை அவள் என ஒருமையில் பேசியது  தமிழ் இலக்கிய மரபு, தான் தமிழ் இலக்கியம் படித்தவன் என கூறினார். பராசக்தியை சொல்லடி சிவசக்தி என கூறிய பாரதியார் மீது வழக்கு தொடரப்படுமா என கேள்வி எழுப்பினார்.  இதனிடையே இன்று காலை நாஞ்சில் சம்பத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒறன்றை வெளியிட்டுள்ளார். அதில் Y-பிரிவு பாதுகாப்பில் இருப்பவர் என் உயிரை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக ஊடக நண்பர் என்னிடம் கூறியுள்ளார். எனவே இதை உலகிற்கு சொல்கிறேன் என அந்த டுவிட்டர் பதிவில் பதிவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காவல்துறைக்கு டேக் செய்துள்ளார். இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் Y-பிரிவு பாதுகாப்பில் இருப்பவர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

click me!